SRHR தொடர்பான சமூக விதிமுறைகளுக்கு சவால் விடும் பெண் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
களனிப் பல்கலைக்கழகத்தில் கடந்த மார்ச் 5ஆம் திகதி நடைபெற்ற 7வது ELEVATE திரைப்படத் திரையிடல் நிகழ்வில் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்றே Washroom.
இளம் பெண் திரைப்பட தயாரிப்பாளர்களின் படைப்பாற்றலை முன்னிறுத்திய இந்த நிகழ்வு, ஒரு திரையிடல் மட்டுமல்ல, பல்கலைக்கழக மாணவர்கள், குறிப்பாக பெண்கள் தினசரி எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு எதிரான ஒரு கூட்டுக்குரலாகவும் அமைந்திருந்தது.
இத் திரைப்படம் நகைச்சுவையாகத் தோன்றினாலும், பல பெண் மாணவிகள் தாங்க முடியாத ஒரு யதார்த்தத்தை இது மென்மையாக எடுத்துக்காட்டுகிறது: போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாமை, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது மற்றும் மாதவிடாய் சுகாதார வளங்கள் இல்லாமை என்பன இப்படம் பேச வரும் விடயங்களாகும். பார்வையாளர்கள் நகைச்சுவையான அம்சங்களைப் பார்த்து சிரித்தாலும், அதன் அடிப்படையான செய்தி தெளிவாக இருந்தது - சுகாதாரம் என்பது வசதியைப் பற்றியது மட்டுமல்ல, அது கண்ணியம், ஆரோக்கியம் மற்றும் பாலின சமத்துவத்தைப் பற்றியதாகும்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ மையத்தின் பணி;ப்பாளர் பேராசிரியர் பிரபா மனுரத்ன, வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துதல் போன்றவற்றுக்கு கல்விச் சூழலில் இடமில்லை என்பதை வலியுறுத்தினார்.
ஒவ்வொரு மாணவரும் தன்னாட்சி உணர்வுடனும், தங்கள் பாலினத்தைப் பற்றி பெருமிதம் கொண்டும், எந்தவிதமான பாகுபாடுகளுக்கும் பயப்படாமல் பன்முகத்தன்மையைத் தழுவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திரைப்படத்தின் இணை இயக்குனர் தேஜானி சேனாதிலக இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கான உத்வேகம் - பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு சரியான கழிப்பறைகள் இல்லாத- ஒரு ஆழமான தனிப்பட்ட போராட்டத்திலிருந்து வந்தது என்பதை வெளிப்படுத்தினார் - “இது வெறும் சுகாதாரம் பற்றியது மட்டுமல்ல," என்று அவர் குழு கலந்துரையாடலின் போது விளக்கினார். “இது கண்ணியம் பற்றியது, கல்விக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பாகவும், மதிப்பாகவும் இருப்பதாக உணர்வது பற்றியது" என்றார்.
அவரது வார்த்தைகள் அங்கு வந்திருந்த 150 பங்கேற்பாளர்களிடையே எதிரொலித்தன. களனிப் பல்கலைக்கழகத்தின் பாலின ஆய்வுகள் மையத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இக்கருத்துடன் உடன்பட்டனர். இது அவர்களின் உண்மையான நிலையும்கூட.
அதைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு படமும் இதேபோன்ற உண்மையைப் பேசியது - பல்கலைக்கழக சூழலில் பாலின அடிப்படையிலான சவால்களை எதிர்கொள்ளும் போது மாணவர்கள், குறிப்பாக பெண்கள் படும் துயரங்கள், தாங்கும் திறன் மற்றும் எதிர்ப்புக் கதைகள் பற்றியதாக அவை அமைந்திருந்தன.
ஊடக மற்றும் தகவல் எழுத்தறிவு மையம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ மையத்துடன் இணைந்து களனிப் பல்கலைக்கழகத்தில் SRHR குறித்த திரைப்படத் திரையிடலை ஏற்பாடு செய்தது. குறும்படங்களை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தி SRHR குறித்த ஒரு உள்ளடக்கிய, திரைப்பட அடிப்படையிலான கலந்துரையாடலை உருவாக்குவதற்காக ELEVATE திரைப்படத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திரையிடல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்புடன் SRHR குறித்த சுமார் 10 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
Comments (0)
Facebook Comments (0)