வக்பு சட்டத்தின் கீழ் கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியினையும் சொத்துக்களையும் பதிவுசெய்க
றிப்தி அலி
கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியினையும் அதன் கீழுள்ள சொத்துக்களையும் வக்பு சட்டத்தின் கீழ் உடனடியாக பதிவுசெய்யுமாறு வக்பு சபை உத்தரவிட்டுள்ளது.
நேற்று (30) புதன்கிழமை இடம்பெற்ற வக்பு சபையின் அமர்வில் கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்போதே மேற்குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1959ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் காணப்படுகின்றன. எனினும், குறித்த சொத்துக்களும் அரபுக் கல்லூரியும் இன்று வரை வக்பு சட்டத்தின் பதிவுசெய்யப்படவில்லை.
எனினும், பாராளுமன்றம், கல்வி அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட ஆறு அரச நிறுவனங்களில் இந்த அரபுக் கல்லூரி பதிவுசெய்யப்பட்டு பல்வேறு அனுகூலங்களை பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில், கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் சபையினால் பல்வேறு நிதி மோசடிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரபுக் கல்லூரியின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதேவேளை, இந்த அரபுக் கல்லூரியினை தனியார் கல்வி நிறுவனமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அதன் நிர்வாக சபை தற்போது முன்னெடுத்து வருகின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் அரபுக் கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பல்வேறு தரப்பினர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் பல முறைப்பாடுகளை சமர்ப்பித்திருந்தனர்.
இதன் பிரகாரம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரினால் கடந்த 2024.12.31ஆம் திகதி விரிவான சபைப் பத்திரமொன்று வக்பு சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பின் சட்டத்தரணிகளும் கடந்த ஜனவரி 15ஆம் திகதி வக்பு சபையில் ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைத்தனர். குறித்த சமர்ப்பணங்களை அவதானித்த வக்பு சபை நேற்று (30) புதன்கிழமை அதன் உத்தரவினை வெளியிட்டது.
வக்பு சபையின் தலைவர் எம்.ஐ.எம். முஹைடீன் ஹுசைன், அதன் உறுப்பினர்களான சட்டத்தரணி எம்.ஏ. மத்தீன், பேராசிரியர் பீ.சீ.பீ. ஜௌபர், முப்தி முஸ்தபா ராசா மற்றும் மஹீல் டொல் ஆகியோர் முன்னிலையில் இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டது.
இதன்போது எதிர்வரும் நான்கு வார காலப் பகுதிக்குள் கல்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியினையும் அதன் கீழுள்ள சொத்துக்களையும் வக்பு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யுமாறு உத்தரவிட்டது.
முறைப்பாட்டாளர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.
இந்த அரபுக் கல்லூரியில் 19 கட்டிடங்கள் காணப்படுவதுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் இந்தக் கல்லூரியின் பெயரில் காணப்படுகின்ற விடயம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்களின் கள விஜயத்தின் போது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)