சவூதி மன்னரின் சொந்த நிதியில் 1,000 பலஸ்தீனர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு
சவூதி அரேபியாவிலுள்ள இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதின் சொந்த நிதியில் 1,000 பலஸ்தீனர்கள் இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதற்கான உத்தரவு சவூதி அரேபிய மன்னரினால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய ஊடகங்கள் நேற்று (019) திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய உயிர்த் தியாகம் செய்தோரின் குடும்பங்கள், கைதிகள் மற்றும் காயமடைந்தோர் என பாதிக்கப்பட்ட 1,000 பலஸ்தீனர்கள் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றவுள்ளனர்.
இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலருடைய விருந்தினர்களாக மேற்கொள்ளும் ஹஜ் மற்றும் உம்ரா திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளது.
மிகவும் முக்கியமான இந்த செயற்திட்டத்தினை அமுல்படுத்துவதற்காக இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலருக்கும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதுக்கும் நன்றியைத் தெரிவிப்பதாக சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சரும் இத்திட்டத்தின் பொது மேற்பார்வையாளருமான ஷேக் டாக்டர் அப்துல்லதீப் அல் அல்ஷேக் குறிப்பிட்டார்.
"பலஸ்தீன மக்களுக்கான ஆதரவினையும் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இராச்சியத்தின் தொடர்ச்சியான கவனிப்பினையும் அதன் புத்திசாலித்தனமான தலைமையின் அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது" எனவும் அவர் கூறினார்.
பலஸ்தீனியர்களும் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பினை வழங்கும் நோக்கிலேயே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
ஹஜ் கடமையை நிறைவேற்ற பலஸ்தீனர்கள் அவர்களது நாட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து மீண்டும் நாடு திரும்பும் வரை அவர்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் வசதிகளையும் வழங்குவதற்கான விரிவான திட்டத்தை அமைச்சு உடனடியாக செயற்படுத்தத் தொடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 1997ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1417) இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலருடைய விருந்தினர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 64,000க்கும் மேற்பட்டோர் ஹஜ் மற்றும் உம்ரா கடமையினை நிறைவேற்றியுள்ளனர்.
இது இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சேவை செய்வதற்கும் இஸ்லாமிய உலகின் இதயமாகவும் முஸ்லிம்களின் கிப்லாவாகவும் அதன் நிலையை வலுப்படுத்துவதற்கும் இராச்சியம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது என அமைச்சர் ஷேக் டாக்டர் அப்துல்லதீப் அல் அல்ஷேக் மேலும் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)