தென்கிழக்கு பல்கலையின் 6ஆவது உப வேந்தராக பேராசிரியர் ஜுனைடீன் பதவியேற்பு
நூருல் ஹுதா உமர்
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தராக அதே பல்கலைக்கழகத்தின் பொறியல் பீடத்தின் பீடாதிபதியாக மூன்று முறை பணியாற்றியிருந்த பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டதன் நிமிர்த்தம் பல்கலைக்கழக உப வேந்தர் அலுவலகத்தில் நேற்று (26) திங்கட்கிழமை பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் உள்ளிட்ட பல்கலைக்கழக உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில் தனது பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி, பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஹோங்கோங் பல்கலைக்கழகம் போன்றவற்றில் கல்விகற்ற சிறந்த கல்விப்பின்புலத்தையும் நிருவாகத் திறமையையும் கொண்டவராவார்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல் கடந்த 2025.04.03ஆம் திகதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கோரப்பட்டுள்ளத்தான் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்தனர்.
இதன் அடிப்படையில் முதலாவதாக பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனும் இரண்டாவதாக பேராசிரியர் ஏ.எம். றஸ்மியும் மூன்றாவதாக கலாநிதி யூ.எல்.செய்னுடீன் ஆகியோர் புள்ளிகள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். பரிந்துரைக்கப்பட்டிருந்த மூவரில் முதலாவதாக தெரிவாகியிருந்த பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனை ஜனாதிபதி சிபார்சு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)